Friday, July 25, 2014

ஆதிவாசிகள், தொன்மங்கள் – லெவி ஸ்ட்ராஸ் - எஸ். சண்முகம்

                



     அடிப்படை பண்புக்கூறுகளைத் தேடுவதே லெவி ஸ்ட்ராஸ் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் காணக்கிடைக்கும் ஆய்வுப் பண்பாகும்
-          எட்மண்ட் லீச்
1



     அமைப்பியல் சிந்தனையாக்கத்தின் மூலகர்த்தாவாகவும், பழங்குடிகள் குறித்தும் அவர்களின் தொன்மங்கள், உறவுமுறை குறித்த மானுடவியல் ஆயுவுகளைச் செய்தவராகவும் உலகெங்கும் நன்கு அறிந்து போற்றப்படும் லெவி ஸ்ட்ராஸ், 1908ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் பிறந்தவர். பின்பு வெர்செய்ல்ஸில் பெற்றோருடன் வசித்தார்.  பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் Aggregation பட்டம் பெற்றார். இவரது பிரதான ஈடுபாடுகளாக மார்க்சியம்/புவியியல்/உளப்பகுப்பாய்வு ஆகியவை அமைந்தன. இத்துறைகளுடன் தனக்கு ஏற்பட்ட பரிமாற்றத்தில் இவருக்கு சில அறிவாக்க வேறுபாடுகள் தோன்றின. குறிப்பாக மார்க்சியத்துடன் தான் கொண்டிருந்த வேறுபாட்டைக் குறிப்பிடுகிறார்;
     மார்க்சியம், புவியியல் மற்றும் உளப்பகுப்பாய்வு எவ்வாறு செல்கிறதோ அது போலவே செல்கிறது....இவை மூன்றின் புரிதலும் ஒருவகை மெய்மையை மற்றொன்றினுள் சுருக்கும் முகமாகவே செயல்படுகிறது; உண்மையான மெய்மையென்பது, மெய்மைகளில் வெளிப்படையாகத் தெரியக் கூடியதல்ல...இவைகளில் பிரச்சனைப்பாடு என்பது அனைத்தும் ஒத்தத்தன்மையானதுதான்; இதன் தொடர்பு....காரணம் மற்றும் புலனுணர்தலுக்கு இடையிலானது”.
                                2
     ஆதிவாசிகள் குறித்த தனது ஆய்வுகளை நடத்த லெவி ஸ்ட்ராஸ் அமைப்பியல் அணுகுமுறையை கைக்கொண்டார்.  “இவர் அமைப்பியலுடன் தன் பெயரை பெருமையுடன் இணைத்துக் கொண்டவர்என தமிழவன் தன் “அமைப்பியலும் அதன் பிறகும் என்ற தன் நூலில் குறிப்பிடுகிறார். தமிழில் லெவி ஸ்ட்ராஸ் பற்றிய மிக தெளிவான அறிமுகத்தை இந்நூல் பதிவு செய்கிறது. இதைப் போலவே நாகார்ஜுனன் மற்றும் எம்.டி.முத்துகுமாரசாமியும் லெவி ஸ்ட்ராஸ் பற்றிய தங்கள் கட்டுரைகளால் தமிழ் சிறுபத்திரிகைகளுக்கு தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
     அமைப்பியல் அணுகுமுறையை விளக்குமுகமாக தன் இளமைக்கால நினைவொன்றின் வாயிலாக “தொன்மமும் அர்த்தமும் என்ற நூலில் கூறுகிறார்.  லெவி ஸ்ட்ராஸ் தன் இரண்டாவது வயதில் எதையும் வாசிக்க இயலாத நிலையில் ஒரு நாள் தன் தாயுடன் வீதியில் நடந்து செல்கிறார். அப்போது அங்குள்ள கடையின் பெயர்ப்பலகையில் Boulanger (Baker), Boucher (Butcher) என எழுதப்பட்டிருந்ததை, படிக்கவே தெரியாத லெவி ஸ்ட்ராஸ் தன்னால் வாசிக்க முடிந்தது என்று கூறியிருக்கிறார். எப்படியெனில் இரண்டு வார்த்தைகளிலும் வெளிப்படையான ஒத்த தன்மை இருந்தது.  மேலும் வரைகலை நோக்கில் (graphic) பார்த்தால்;  அதில் ‘bou’ என்பது இரண்டிலும் பொதுவான பண்பை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆக ‘bou’ என்பதைக் காட்டிலும் Boulanger, Boucher என்ற இரண்டிலும் வேறு அர்த்தம் பயின்றுவர வாய்ப்பில்லை; அனேகமாக இதைக்கட்டிலும் அமைப்பியல் அணுகுமுறை வேறொன்றுமில்லை என்கிறார்.  இந்த invariant மாறாததன்மை மீதான வேட்கை அல்லது மேலெழுந்த வாரியான வித்தியாசங்களுக்கு இடையே மாறாத பண்புக்கூறுகளைத் தேடுவது மற்றும் இந்த invariant கூறுகளைத் தேடுவதைத்தான் அமைப்பியல் அணுகுமுறை நாட்டத்திற்கான உந்து சக்தியாக லெவி ஸ்ட்ராஸ் விளக்குகிறார்.
     இதன்மூலம் நிகழ்த்தப்படும் ஆய்வுகளின் நோக்கமானது மனித மனத்தின் உண்மையான பண்புகளை நிறுவுவதுதானே தவிர எந்தவொரு சமூக நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ (அல்லது) ஒரு சமூகவர்க்கத்தை பற்றியோ சொல்வது முக்கியமல்ல; மேலும் இவைகளில் உள்ள வேறுபாடுகளுக்கு இடையே காணப்படும் மாறாத பண்புகளே அடிப்படையாகும் எனக் கூறிச் செல்லும் லெவி ஸ்ட்ராஸ் ஒழுங்கின்மையிலிருந்து ஒழுங்கை கண்டடைதல்/காலப் பார்வையுடன் தொடர்முறையின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக விவாதிக்கிறார். அதைத் தவிர இருவேறு பண்புகளைக் கொண்டுள்ள அமைப்புகளுக்கிடையே காணப்படும் உள்ளார்ந்த ஒருமையென்பது வித்தியாசப்படுத்தலின் வழியாக நிறுவப்படுதல் என்பது இம்முறையின் நுட்பமான உட்தந்திரமாகும்.
                                3



     ஆதிவாசிகளைப் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து செய்துவந்த லெவி ஸ்ட்ராஸ் தன் எழுத்துக்களில் ஆதிவாசிகள் என்ற வார்த்தையை அடைப்புகுறியிட்டுதான் பயன்படுத்துவதாக கூறுகிறார். ஆதிவாசிகளை எப்பொழுதும் லெவி ஸ்ட்ராஸ் ‘எழுத்தற்றவர்கள்என்று அழைப்பதை ‘primitive thinking and the ‘civilized’ mind”  என்ற சொற்பொழிவில் குறிப்பிடுகிறார். இவர்களுக்கு தங்களைச் சுற்றியுள்ள சூழலைக் குறித்தும் அதன் வளங்களைக் குறித்தும் மிக நுட்பமான அறிவும் பார்வையும் உள்ளது என்கிறார். தாவரங்கள், மிருகங்கள் தொடர்பான பார்வையும் அறிவும் நவீன மனிதனின் அறிவின் விரிவைக் காட்டிலும் பல அடுக்குகளிலான தொகுப்பை எழுத்தற்றவர்கள் கொண்டுள்ளனர்.  மேலும் மனித இனத்தின் பல்வேறு தொகுதிகளில் காணப்படும் கலாச்சார வித்தியாசங்களுகு இடையேயும் மனித மனத்தின் உட்சரடு ஒத்திசைவு உடையதாகவே இருக்கிறது என்கிறார்.
     இத்தகைய ஒத்திசைவு பண்பை விளக்க முற்படும்போதுஇரட்டை பிறவிகள் மற்றும் உதட்டு பிளவுள்ளவர்கள் பற்றிய தொன்மத்தைப் பற்றி “Harelips and Twins : The splitting of a Myth” சொற்பொழிவில் கூறும்போது தென் அமெரிக்க தொன்மத்தை விரித்துரைக்க வட அமெரிக்க தொன்மத்தில் தனக்கு கிடைக்கும் ஒரு துப்பு அல்லது திறவுகோல் வழியாக விளக்க முயற்சிக்கிறார். மேலும் இத்தகைய இரட்டைப் பிறவிகளுக்கே உரிய நூதன சக்தியாக இயற்கை சீற்றங்களான சூறாவளிகளை கலைத்துவிடவும்; வானிலையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் பிரத்யேக சக்தியுண்டு என்கிறது தொன்மங்கள். இரட்டைப் பிறவிகளின் எதிரும் புதிருமான குணாதிசயங்களைக் குறிக்கும் தொன்மங்களை கையாளும் லெவி ஸ்ட்ராஸ் Jupinarbar, பிரேசிலின் கடற்கரையோர பண்டைய இந்தியர்களிடையே மற்றும் பெருவிலும் ஒரு தொன்மக்கதை புழங்குகிறது.  அக்கதையை பிரெஞ்சு துறவி Andre Thevet பதினாறாம் நூற்றாண்டில் பதிவு செய்வது பற்றி கூறுகிறார். ஒரு பெண்ணுக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் ஒன்று கணவனுக்கும் மற்றொன்று அவளை தந்திரமாக களவாடியவனுக்குமாக பிறக்கிறது.  களவாடியவனை தந்திரக்காரன் என்கிறது கதை.
     அப்பெண் கடவுளைக் காண பயணிக்கிறாள். காணப்போகும் கடவுளை கணவனாக கருதுகிறாள்.  இப்பயணத்தில் குறுக்கீடு செய்யும் தந்திரக்காரன் தானே அந்தக் கடவுள் என அவளை நம்பும்படி செய்கிறாள். பிறகு அவனை களவாடிவிடுகிறான். பின்பு அவள் தன் கணவனை சந்திக்க நேரிடுவதில் கணவன் மூலமாக கருத்தரிக்கிறாள்.  இந்த எதிரும் புதிருமான இரட்டைச் சேர்க்கையினால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. அந்த இரட்டைச் சேய்களை பொய்மை இரட்டை என்கிறார் லெவி ஸ்ட்ராஸ். ஏனென்றால் ஒரே தகப்பனுக்கு பிறக்கும் இரண்டு சேய்களை இரட்டை பிறவியென்பதால். இது தந்திரக்காரன், கணவன் ஆகிய இரட்டைச் சேர்க்கையில் கருத்தரிப்பதால் பொய்மை இரட்டை என்கிறார்.
     இவ்வாறு பொய்மை இரட்டைகளாக பிறக்கும் சேய்களில் ஒருவன் வீரனாகவும் மற்றவன் கோழையாகவும் நேரெதிர் பண்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது கணவனுக்கு பிறந்தவன் வீரனாக இந்தியர்களுக்கு சாதகமானவனாக இருக்க மற்றவன் வெள்ளையர்களுக்கு ஆதரவாளனாகவும் ஒருவன் ‘இந்தியர்களுக்கு நன்மை செய்பவனாகவும்/மற்றவன் எதிர்பாராத பல சங்கடங்களை இந்தியர்களுக்கு கொணர்பவனாகவும் இருக்கின்றனர்.  இதே தன்மைகொண்ட தொன்மப்பண்புகள் வட அமெரிக்காவில் உள்ளது போலவே தென் அமெரிக்காவிலும் காணக்கிடைக்கிறது என்கிறார் லெவி ஸ்ட்ராஸ்.  மேலும் அவர் எடுத்துக்கூறிய தொன்மத்தினூடாக காணப்படும் நேரெதிர் பண்புகள் தொன்மத்தில் விரவியுள்ள இருமை எதிர்வுச் சிந்தனைக் கூறுகளின் அடுக்கை இவ்வாறு காணலாம்.

பொய்மை இரட்டைகள்

கணவன் X  தந்திரக்காரன்
                  
          

கணவன் வழி மகன்X தந்திரக்காரன் வழி மகன்


வீரன் கோழை


இந்தியர்களுக்கு ஆதரவு X வெள்ளையர்களுக்கு ஆதரவு      

நல்லவைகளை கொணர்பவன் X துரதிர்ஷ்ட்த்தை கொணர்பவன்
                    
     இவ்வாறு தொன்மங்களுக்குள் புதைந்திருக்கக் கூடிய இருமை எதிர்வுச் சிந்தனை அமைப்புகளை விரித்து அறிந்து கொள்ள லெவி ஸ்ட்ராஸின் அணுகுமுறை நமக்கு புதிய அறிதல் முறையாக உதவுகிறது. மேலும் தொன்மங்கள் எவ்வாறு வாசிப்பது என்பதைக் குறிக்கும் பல அணுகுமுறைகளை லெவி ஸ்ட்ராஸ் அளிக்கிறார்.
     குறிப்பாக தொன்மங்களை ஒரு நாவல் போலவோ அல்லது ஒரு தினசரி பத்திரிகையைப் போலவோ வரி வரியாக இட வலமாக வாசிக்கும் வாசக மனப்பழக்கத்தில் தொன்மத்தை புரிந்துகொள்ள முடியாது என்கிறார். தொன்மத்தை முழுமையான ஒரே தொகுதியாக வாசிக்க வேண்டும் என்பதோடு தொன்மங்கள் ‘நிகழ்வுகளின் தொடர்நிலையில் அர்த்தப்படுவதில்லை என்கிறார்.
                                4


     மேற்கண்டதின் நீட்சியாக தொன்மங்களை வாசிக்கும் வேறு அணுகுமுறையையும் லெவி ஸ்ட்ராஸ் குறிப்பிடுகிறார். தன் சிறுபிராயத்தில் இசை மீது பேரார்வம் கொண்டிருந்தார். தொன்மங்களை இசை கோர்வையை வாசிப்பது போல வாசிக்க வேண்டும் என்கிறார்.  ஒரு இசைக் கோர்வையில் ஒரேயொரு இசையுருவை வாசித்தால் அது ஒரேயொரு ஒலியைக் குறிக்கும். ஆனால் அதையே முழுமையாக தொடர்நிலையில் வாசிக்கும் போது அக்கோர்வையை முழுமையாக உள்வாங்க முடியும் என தொன்மமும் இசையும்எனும் கட்டுரையில் கூறுகிறார்.  மேலும் தொன்மத்தை தனித்தனி உறுப்புகளாக வாசிக்காமல் முழுமையையும் வாசிக்க வேண்டும் என்கிறார்.  இதற்கு ஒப்பாக மொழியின் அமைப்பையும் ஒப்பீடு செயது விளக்குகிறார்.  அதில் phoneme என்ற ஒலியன்களைக் கொண்டதே வார்த்தையாக, வார்த்தைகள் இணைவு கொண்டு வாக்கியம் அமைகிறது.  ஆக இசையிலும் இதேபோல் ஒலிஉருபுகள் உள்ளது அவைகளின் கோர்வையில் இசை இயங்குகிறது என்று விளக்குகிறார்.
     தொன்மம்/இசை/மொழி ஆகிய மூன்றையும் ஒப்பீடு செய்யும் லெவி ஸ்ட்ராஸ்; தொன்மங்களுக்கு இசைக்கும், மொழிக்கும் உள்ள பிரதான் வேறுபாட்டைக் காண்பிக்கிறார்.  தொன்மத்தில் ஒலியன் இல்லை என்கிறார்.  மொழி வாய்ப்பாட்டை மாதிரியாக எடுத்தால் ஒலியன்கள் முதலாக, வார்த்தை இரண்டாவதாக, வாக்கியம் மூன்றாவதாக அமைகிறது.  /இசையில் ஒலியன்களுக்கு சமமானவையும், வாக்கியத்திற்கு சமமானவையும் இருக்க, வார்த்தைக்கு சமமான அமைப்பு இல்லை./ தொன்மங்களில் வார்த்தை/வாக்கியத்திற்கு இணையானவை இருக்க ஒலியன்களுக்கு இணையில்லை/.  ஆக இசை/தொன்மம் ஆகிய இரண்டிலும் ஒரு அடுக்கு இல்லாதிருக்கும் இன்மைப்பண்பு உள்ளதென்று ‘தொன்மமும் இசையும்என்பதில் விவாதிக்கிறார்.  மேலும் இதில் சசூரின் மொழிச் சிந்தனையைப் பற்றியும் ரோமன் யாக்கோப்சனின் Le Son et le Sens இல் உள்ள ஒலியன்களுக்கு அர்த்தம் உள்ளது என்ற கருத்தாக்கத்தைப் பற்றியும் விவாதித்து செல்கிறார்.  தொன்மங்களைக் குறித்த அவருடைய மற்றைய புத்தகமான The Raw and The Cookedல் Overture என எழுதப்பட்டுள்ள தொடக்கவுரை தொன்ம ஆய்வு குறித்த மிக விரிவான பார்வை தரக்கூடியது.  தென் அமெரிக்க இந்தியர்களின் தொன்மங்களை மிக விரிவாக ஆராய்கிறது. 

பயன்படுத்தப்பட்ட நூல்கள்:
1.       Levi-Strauss – Edmund Leach
2.       Myth and Meaning – Levi Strauss
3.       The Raw and The Cooked – Levi Strauss
4.       Tristes Tropiques – Levi Strauss
5.       அமைப்பியலும் அதன் பிறகும் - தமிழவன்
6.       திணை இசை சமிக்ஞை – நாகார்ஜுனன்
7.       லெவி ஸ்ட்ராஸ் சிறப்பிதழ் – நாட்டார் வழக்காற்றியல் (எம்.டி. முத்துகுமாரசாமி)


1 comment:

Thenammai Lakshmanan said...

மிக அருமை. எனக்குச் சில இடங்கள் புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும்
உங்கள் அழகான மொழிபெயர்ப்பினால் அதை எளிமையாக்கி இருக்கிறீர்கள்.

வலையுலகில் புதுமையான அர்த்தம் செறிந்த மிக அத்யாவசியான ஒரு ஆவணக் காப்பகமாக , ஆய்வுக் கட்டுரையாக இருக்கிறது.

பொழுது போக்குக்கு எழுதுகிறோம் நாங்கள். நீங்கள் விமர்சனத்தைக் கூட ஆய்வுக்கட்டுரையில் சமர்ப்பிக்கிறீர்கள்.

புது உலகில் நுழைந்தது போல கொஞ்சம் மிரட்சியாக இருந்தாலும் லகுத் தன்மையாலும் நீங்கள் புலப்படுத்தும் எளிமையாலும் புரிந்து கொண்டு உணர்ந்து கடக்க முடிகிறது. நன்றி ஷண்முகம்.