Tuesday, July 22, 2014

துயிலும் விழிப்பும் ஒன்றன்பின் ஒன்றாக அச்சிடப்பட்ட கதை - “கனவு மிருகம்” தொகுப்பிற்கான திறனாய்வு - எஸ். சண்முகம் வெளியீடு - கல்குதிரை


           1
ஒரு புனைவின் கதையாடலில் ஒழுங்கமைவை உருவாக்குவது கதை உயிரிகளின் அசைவு.  ஒரு சிறுகதையின் சொல்லுதல்; கதையின் மொழிப்பரப்பைக் கட்டமைக்க முனைகிறது.  அதில் ஊடாடி வரும் படிமங்களையொத்த தோற்றங்கள் கதையின் போக்கை விரித்துச் செல்கின்றன.  ஒரு பிரதியில் ஒற்றை கதையாடலற்ற பன்மைக் கதையாடலை கதாபாத்திரங்களின் ‘அழிப்பாக்கம்கிளைக்கச் செய்கிறது.  ஒரே கதைப் பிரதியில் வெவ்வேறு கதைக்கான கதையாடல்கள் புழுங்கிக் கொண்டிருக்கச் செய்யும் கதையாடல் உத்தியை ஒருவகை நவீனத்துவம் கடந்த நிலையாகக் கொள்ளலாம்.  கதாபாத்திரங்களை அழித்துவிட்டு அதில் எஞ்சிய மொழிக்கூறுகள் கொண்டு குறிகளின் வழியாக மறு-புனைவாக்கம் செய்யும் நூதன நுட்பம் பாலசுப்ரமணியனின்  ‘கனவு மிருகம்’.  ஒரு பிரதியில் மனிதத் தடயத்தை அழித்துவிட்டு ‘படிம மிருகியத்தைகதையாடல் கனவில் அசைந்தாட வைக்கிறது.

கனவுதான் பாலாவின் கதைப்பிரதி.  ஒரு கனவு சம்பவக்கிம் வெளியாக துயில் இருக்கிறது.  துயிலின் பரப்பில் கனவுக் குறிகள் – படிமங்கள் சுழல்கின்றன.  இச் சுழற்சியில் கதையாக்கம் உறக்கம் விழிப்பு – கனவு கலைதல் என்பதில் நிகழ்கிறது.  இதனை பிரதியில் எதிர்கொள்ளும் வாசகன் இருவேறு காலப் புள்ளிகளிடையே அலைக்கழிக்கப்படுகிறான். மாசல் புருஸ்டின் கதையாடலில்:

     ஒரு மனிதன் துயிலுறும் தருணம் அவனிச்சுற்றி நாழிகையின் சங்கிலித் தொடரில் ஒரு வட்டமிருக்கும். வருடங்களின் வரிசைக்கிரமும், வானோளிக் கோள்களின் ஒழுங்கு வரிசையும் இருக்கும்.  இயல்பாகவே அவன் துயிலெழுந்த பின்தான் அதனை அணுகிப் பேசுவான் ஸ்வான்ஸ் வேயில் – மார்ஸல் புருஸ்ட் (கடந்தவைகளின் நினைவாக்கம் – நினைவு கூறல்).

உறக்கதில் நிகழும், எதிர்கொள்ளும் அனைத்தையும் மனிதன் இயல்பாகவே விழித்த பின்புதான் எதிர்கொள்கிறான். அப்படியெனில் துயிலும் விழிப்பும் ஒன்றன் பின் ஒன்றாக அச்சிடப்பட்ட பிரதியாகிறது. கனவுகளின் தொடர்ச்சியற்ற தன்மை – கோர்வையற்ற தன்மையை கதையாடலில் கிளைக்கச் செய்கிறது.  கதைப்பிரதியில் தோன்றுபவை கனவு காணும் உடலிய பிறன்மையைக் காட்டிலும் இரட்டை நிலை உடையாதாக இருக்கிறது.  இவ்விரு துயில் வெளியில் நிகழும் காட்சி ரூபங்களை மொழியில் படிசெய்யும் (trace)  கதையாடலாகிறது ‘கனவு மிருகம்என்ற கதைப்பிரதி.  இப்பிரதியில் வரும் காண்டாமிருகம்’ என்ற கனவில் தோன்றி பின்பு அதிலிருந்து தப்பித்து புறவயப்படுகிறது.  கனவைப் புறவயப்படுத்தும் இக்கதைப் பிரதி இரட்டைக் குறிவயப்படுகிறது, கை கொள்கிறது, பிரதிக்குள்ளும் பிரதிக்கு வெளியேயும் அலைகிறது.
1.       அவன் வனமாகவும் அம்மிருகமொன்றுதான் வனத்தின் ஒரே விலங்காகவும் எண்ணத் துவங்கினான்.

2.       கனவிலிருந்து தப்பிய காண்டாமிருகம் அவனுடைய எட்டு திசைகளிலும் திரியத் துவங்குகிறது.  இதில் வனம் என்பது உடல்பரப்பு.  மற்றொன்று மனம் என்ற மாற்றுப்பரப்பு என்று இரட்டைப்படுகிறது.  கனவிலிருந்து தப்பி வெளியேறிய காண்டாமிருகம் என்ற புனைவு உயிரிக்கு கனவைக் கடந்துவிட்ட வேறொரு வெளி கிட்டுறது என்ற கதையாடலின் மூலம் கனவு உயிரி புனைவு உயிரியாகிப் பருண்மப்படுகிறது.  இவ்வகையான மூன்றாம் நிலைமாற்றத்தை பிரதியாக்கம் எனலாம்.  இம்மூன்று நிலைமாற்றத்தைக் கதையாடல் தன்வயப்படுத்திக் கொள்கிறது.  இவை உடல் வெளிக்குள் நிகழ்கிறதாக பிரதி வெளியின் குறிகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. வாசகனுக்கு வாசிப்பில் நிகழும் தொடர்ச்சியற்ற கதையாடலின் ஊடாட்டம் ஒருவகைப் புனைவுப் பிரதியாக்க உத்தியாகிறது.

“மிருகங்களைக் காட்டிலும் கனவு வலிமையானது.  கனவைக் காட்டிலும் கனவில் வருகிற மிருகங்கள் வலியவை எனவும் அறிந்து கொள்ள முடியாத குணங்கள் உடையாது.  கனவில் வரும் மிருகம் எனவும் தனக்குச் சொல்லிக் கொண்டான். பக். 10 (கனவு மிருகம்)
    2   
காண்டாமிருகத்தை வெளிக்கொணர்ந்த கதை சொல்லியின் கனவுப்பரப்பு: கதைப் பிரதியாக உருமாற்றம் அடைகிறது.  வாசகன் எதிர்கொள்ளும் கனவு மிருகமன காண்டாமிருகம் எதையாவது குறிப்பீடு செய்கிறதா என்று அறிய நிகழ்த்தப்படும் வாசிப்பும்; மற்றொரு புறம் கதை சொல்லி இதனைத் தானே அறிந்துணர அல்லது உரைகூற விழைகிறார்.  அதற்கான சாத்தியப்படுகளாக மூன்று உப-கதையாடல்களைக் கட்டமைக்கிறார்:
1.      1,  கனவுக்குப் பலன் சொல்லும் கிழவி
2.     2.   கணிதப் பேராசிரியரிடம் விளக்கம்
3.     3.   கதை சொல்லியிடம் கேட்பது
இம்மூன்று சாத்தியப்பாடுகள் கனவு மிருகத்தை கட்டமைக்கும் கதையாடலின் வலைப்பின்னலாக நிகழ்த்தப்படுகிறது.  கனவு நிகழும் புள்ளியென்பது “பிரதியாக்க முன்-நிலைஎன்பது இங்கு பிரதியின் முன் நினைவாகிறது.  பிரதி எழுதப்படுவது நினைவாக்கமாகவும்; வாசிப்பு மறு-நினைவாக்கமாகவும் மூன்று அடுக்குகளாகப் பிரதியின் இழை முறுக்கப்படுகிறது.  இதன் பதிலியாக்கமாக மூன்று மாற்று விளக்க அல்லது உரை கூறுதல் கதைப்பிரதிக்குள் நுண்ணிய கதையாடல்களாக (micro narrating) இயங்குகிறது.  இவ்வாறு காண்டாமிருகம் எனும் குறிக்கான குறிப்பீடு மூன்று வெவ்வேறு வாசிப்பை உருக்கொள்ளச் செய்கிறது.  ஒரு மிருகிய வடிவம் மூன்று பேரின் பார்த்தலின் கேட்டலின் வழியாகக் கட்டமைக்கப்படும் உப கதைகள் பெருக்கப்படுகின்றன.  இவை ஒவ்வொன்றும் மற்றொன்றோடு தொடர்புற்று இருக்கின்றன. மூன்று மொழி வெளிக்குள் மறுமுறை (re-telling) சொல்லுதல் பிரதியில் நிகழ்த்துதல் உத்தியாகிறது.   இதில் உருக்கொள்ளும் மூன்று கதையுரைகள் தன்னளவில் வேறு புதிய கதையாகிறது.  ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கதை சொல்லி மெல்ல மங்கி மறையத் துவங்குகிறார்.
1  1.      பலன் கூறும் கிழவியின் கதையாடல்  
மழை பெய்யும் நாளில் கனவுகளுக்குப் பலன் சொல்லும் கிழவி ஒருத்தியிடம் கேட்டான்.  கிழவி கண்களை மூடிக்கொண்டு இவன் முற்பிறப்பில் காண்டாமிருகமாக இருந்த்தால்தான் அக்கனவின் தாக்கம் இன்னும் இருக்கிறது என்று சொன்னாள்.

2 2.      கணிதப் பேராசிரியரின் கதையாடல்
இன்மையைக் குறிக்கிற பூஜ்யத்திலிருந்து ஒருமையைக்
குறிக்கிற ஒன்றிலிருந்து பன்மையைக் குறிக்கும் ஒன்பது வரையில் எண்கள் முடிந்து போய்விட்ட்தில் அறியமுடியாத பிரபஞ்ச கட்டுமானம் இருப்பதாகவும் அவர் இவனிடம் சொன்னார்.
3 3.    கதைசொல்லியின் கதையாடல்
இந்திய மனதிற்கு காண்டாமிருகம் பொருந்தாத ஒன்று. 

மனிதன் பிறந்திராத காலத்தில் நிலத்தில் வாழ்ந்த ராட்சத விலங்குகளின் சுருங்கிய வடிவமாக இருக்கிற அம்மிருகம் அந்தக் காலத்தின் இழப்பை தன்னுள் தேக்கி வைத்திருக்கிறதுஎன்றார்.
மேற்காணும் மூன்று கதையாடல்களில்
1  1)      பலன் கூறும் கிழவி; முற்பிறவியின் தாக்கம்
2  2)      கணிதப் பேராசிரியர்; அறிய முடியாத பிரபஞ்ச கட்டுமானம் இல்லை
3  3)      கதை சொல்லி; காலத்தின் இழப்பை தன்னுள் தேக்கி வைத்தல்

இம்மூன்றும் கதை சொல்லியின் மனதில் எண்ணங்களை கிளரச் செய்கிறது.  இதில் காண்டாமிருகத்தை எதனோடு பொருத்திக் காண்பது என்ற புதிர்மை எழுகிறது.  இப்புதிர்மையிலிருந்து விடுபடாத கதை சொல்லியின் கதையிறுதி நிகழ்கிறது.
  
   அப்போது இவன் பார்வையில் கூடத்திலிருந்து அவருடைய அறைக்கு நகரும் அவனுடைய தந்தை ஒரு காண்டாமிருகமாக மாறி விட்டிருப்பதைப் பார்த்தான்”.
   
  காண்டாமிருகத்தின் முகத்தில் நிலவும் குழந்தைமை அவருடைய முகத்திலும் நிலவுவதாக அவன் கண்டான்.  தான் புரிந்துகொள்ளப்படாத காலத்தில் வாழ்கிற தந்தைமார்கள் காண்டாமிருகங்களைப் போன்றவர்கள் எனச் சொல்லிக் கொண்டான்.

     அன்றிரவு உறக்கத்தில் கனவிலிருந்து தப்பிய காண்டாமிருகம் மீண்டும் கனவுக்குச் சென்று அங்கிருந்து இன்மையின் கருந்துளையில் மறைந்தது”.




                          3
கதைகளில் உருவாகும் ஒருவகைச் சட்டகம் வாசகனை அதன் மொழிப்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கிறது.  அச்சட்டகம் கதையாடலின் உள்-தர்க்கத்தை கிரகிக்க உதவுகிறது.  ஒரு புனைவு நிகழ்த்தப்படும் தருணங்களில் தான் உள் வாங்கிய நிலப்பரப்பு, அதில் கண்ணுற்ற உயிரிகள், இயற்கை சார்ந்த குறியீடுகள் மனதின் ஆழத்தில் சொற்களைப் போல் பதிந்து விடுகிறது.  அவை பிரதியாக்கச் சூழலில் மீண்டும் ரசவாதமுற்று வேறொன்றாக உருவாமாற்றம் அடைந்து வெளிப்படுகிறது.  கண்டு உணர்ந்த குறியீடுகள் படிமங்கள் நம்முள் முதல் பார்த்தலில் ஏற்படுத்திய அதிர்வுகளை; மொழியாக்கத்திற்கு உட்படும்போது ஏற்படுதில்லை. ஆனால் அவைகளைப் பிரதியில் எதிர்கொள்ளும்போது ஒருவித புதிர்மையை அளிக்கிறது.  

அப் புதிர்மையை காட்சி சார்ந்த நிலையிலிருந்து பிரதியியல் சார்ந்த குறியீடாக நாம் எதிர்கொள்ளும்போது புதிர்மையை தோற்றுவிக்கிறது.  காட்சிபுலன் அறிதலும் எழுத்து மொழிவழி அறிதலுக்கும் இடையே ஒரு ‘வெளிஇருந்து வருகிறது.  இதன் தன்மையை முழுவதுமாக உணர்ந்துகொள்ள வைப்பவை கதையாடல் பிரதிகள்.  மீ-இயற்கை சார்ந்த குறியீடுகள் நமது உள்ளார்ந்த மன வெளியில் இயங்கக் கூடியவை.  குறியீட்டிற்கும் அதனை பிரதியில் நாம் வாசித்து அகவயப்படுத்தும் நிகழ்வும் ஒன்றோடு ஒன்று பிணைந்த தன்மை கொண்டது.

இதில் தொடர்புறுத்தல் தொடர்பறுத்தல் என்னும் வாசிப்பு ஒருவகை இரட்டை எழுத்து முறையைக் கொண்டிருக்கிறது.  கனவு மிருகம் தொகுப்பில் உள்ள “சின்னஞ்சிறு கதைகள்” பகுதியில் இப்படியொரு அபூர்வ குறும்புனைவு இடம் பெற்றுள்ளது. 

“ஜன்னலில் நுழையும் யானை”,  ஜன்னல் என்ற சட்டகத்தை முன்னிறுத்தும் பிரதி.  ரிதன்யாவிற்கு முதல் நாள் இரவு உறக்கத்தில் நிகழும் ஒரு கொடுங்கனவு அழகர் திருவிழாவின்போது தான் கண்ட யானை, தனது ஜன்னல் வழி வருகிறாதாவெனச் சொல்கிறாள். காண்டாமிருகம் கனவிலிருந்து வெளிவருகிறது.  இப்பிரதியில் யானை ஜன்னல் வழி உள்வருகிறது.  இந்த நேரெதில் புதிர்மை விசித்திரமான பண்பாக கதையில் வருகிறது.

ரிதன்யாவிற்கு மட்டுமே காட்சியுறும் யானையைத் துரத்த எடுக்கப்படும் நடவடிக்கையில் கோரிப்பாளைய மசூதியில் மயிலறகால் வருடி மந்திரிக்கப்படுகிறாள்.  பின்பு வீட்டில் யானை நுழையாமல் இருக்க செய்யப்பட்ட மற்றொரு ஏற்பாடு ஜன்னல்களை மூடிவிடுவது.  ரிதன்யாவிற்கு மூடப்பட்ட ஜன்னலிலிருந்து யானை வருவது நின்றுவிடுவதாக கதைப்பிரதி அனுமானம் செய்கிறது.   பின்பு ரிதன்யா கதைவைத் திறக்கச் சொல்லும்போது யானை மறுபடியும் பிரவேசிக்கலாம் என்று அவளது அம்மா கூறுவதை மறுத்து விடுகிறாள்.  ஆனால் மறுபடியும் திறக்கப்பட்டதும் ஜன்னல் வழியாக மயில் வருகிறது என்கிறாள். இப்பிரதியில் நிகழும் காட்சிரூபம் புதிர்மையாகிறது.  ஆனால் இறுதியில்,
     குழந்தைகள் ஜன்னல் வழியே உலகைக் காண்பதில்லை.  உலகம் ஜன்னல் வழியே குழந்தைகளைக் காண்கிறது.
   
  என்கிறார் கதைசொல்லி.  கதைப் பிரதியின் சட்டகம் கதைப்பிரதியின் உள்ளிருந்து புறத்திலுள்ளவற்றை அணுகுவதில்லை.  புறத்திலுள்ளவை பிரதிக்குள் உள்ளவைகளை அறிய முயல்கிறது என்பதாக நீள்கிறது. 
மனித மையத் தன்மை கதைப்பிரதிகளில் அதீத உணர்வைப் பெருக்கி கதையாடலின் போக்கினை ஒரு குறிப்பிட்ட தருணத்தின் நிகழ்வை முன்னுறித்தி வாசக அனுபவத்தை பிரதியின் மாற்றாக உருவகிக்கிறது. கதைக்குள் நிகழும் துர்மரணம் தூண்டும் உணர்வை பிரதியில் மட்டுப்படுத்தும் விதமாக “குறுஞ்செய்தியாய் அனுப்பப்பட்ட மரணம்கதையில் தனது சிநேகிதியான கோகிலாவின் மரணம் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக வருகிறது.  வழக்கமான மனித-மையக் கதையாடலில் அதனை அடர்த்தி செய்யக் கையாளப்படும் உத்திகளைத் தவிர்த்து ஒருவித அசைவற்றதை உருவாக்குகிறது.
     அந்தத் தருணத்தின் உறவை உடைத்த முதல் எண்ணம் அந்த மரம்  அசைந்ததுதான் என்பதை, நான் அவளுடைய முதலாம் நினைவு நாளான இன்றும் சரியாக நினைவு கூற முடிகிறது”.
     எனக்கென்னவோ அந்த மரம் மகிச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆடுவதாகப்பட்டது.
     
கதையின் போக்கில் திடீரென வெளிப்பட எத்தனிக்கும் மனித-மைய உணர்வு மரத்தின் கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியில் கீழறுப்பு செய்யப்படுகிறது.  இங்கு கோகிலாவின் துர்மரணம் என்பதும் காலத்தில் நிகழ்ந்து நகரந்துபோகும் பிரதியியல் நிகழ்வாக வாசிப்பின் போக்கில் மட்டுப்படுகிறது.  எதார்த்தவகைக் கதையாடல்களிலிருந்து விடுபட்ட ஒருவித அரை-எதார்த்தக் கதையாடலைக் கொண்டதாக இது அமைகிறது.  அ-மனித மைய எழுத்தின் தொழில்நுட்பம் துர்மரண உணர்வை மரத்தின் மகிழ்ச்சியான ஆட்டத்தால் சாத்தியப்படுகிறது.
                           4
வண்ணங்களால் நிகழும் அபூர்வ பிராந்தியத்தை வாசிக்க முடியும் சாத்தியம் கதைக்குள் நிகழ்த்திக் காட்டுகிறது “ஓவியத்தில் ஒருவன் என்ற கதை.  விதவிதமான வண்ணங்களும் வடிவங்களும் மாறி மாறி ஒன்றுகூடி பிரிந்துவிடுவதும் மீண்டும் தன்னிச்சையான சேர்க்கையில் ஒளிரும் மொழிப்பரப்பாய் விரிகிறது இப்பிரதி.
     அந்தப் பிராந்தியம் முழுக்க ஓவியர்கள் நிறைந்திருந்தனர். வண்ணங்களுக்காக இலைகளையும், மரப்பட்டைகளையும் விதவிதமாக கலப்பதும் கரைப்பதுமே அந்தப் பிரந்தியத்தியத்தின் தொழில்” (பக்-79)
வண்ணங்களாலும் X வடிவங்களாலும் விளிம்புகளை மட்டுமே மொண்ட கதையாடலை “ஓவியத்தில் ஒருவன்எனும் கதையில் காண முடிகிறது. கதைக்குள் என்ன நடக்கிறது என்பதேயன்றி பிரதியின் ஓரங்களில் ஊர்ந்து உருக்கொள்கிறது.  தீர்மானமற்ற மொழிக் கோர்வைகளால் நிலப்பரப்பு உருவாகிறது.
     அந்தப் பிராந்தியத்தைக் குறித்து இந்தச் சொல்கதையை அதைக் குறித்த நெடுநாளைய பொருத்தமான விவரணையாக இருந்தது.  இதை எனக்குச் சொன்னவர்களின் இரண்டு மூன்று வகைமைகளை ஒன்றாகச் சேர்ந்து நான் உருவாக்கிய கதை வடிவம்”.

மூன்று வகைமைகளை ஒன்றாக உருவாக்கப்பட்ட கதையில் “ஐமற்றும் “ஃஎன இரு அட்சர உயிரிகள்சம்பவிக்கின்றன. இவை இப்பிரதியின் கதையோட்டத்தை நிர்மாணிக்கின்றன.  பிரதி முழுதும் நிறங்களாகவும், அவைகளுக்கிடையே நிகழும் மாற்றங்கள் சேர்க்கைகளால் நிறைகின்றன. பூனைகளும் கரும்புள்ளிகளை கோடுகளாக மாற்றி புலியுருவை உருமாற்றுவதும், மீன்கள் பாம்புகளாகவும், பறவைகளாகவும் மாற்றமடைவதாக கதை சொல்கிறது.  ஒன்றிலிருந்து மற்றொன்று லேசான மாற்றங்களால் சாத்தியப்படுகிறது.

இதற்கு மற்றொரு பரிமாணத்தைக் கொள்ளவைக்கும் கதைப்புள்ளி ஓவியப்போட்டியில் நிகழ்கிறது.
“போட்டியின் துவக்கத்தில் ‘ஐகவனித்தான், ‘ஃன் மூக்கு பெரிதாகவும், அவன் முகத்திற்கு பொருத்தமில்லாமலும் இருப்பதை, அவ்வாறே உதடுகள் சிறியதாகவும் வெளுத்தும் இருப்பதை கவனித்தான்.
“இருவரும் ஒப்புக்கொண்டு மாற்றி மாற்றி உறுப்புகளை திருத்தி வரைந்தனர். முடிவில் ஆச்சரியமான ஒன்று நடந்தது. கடைசியாக ‘ஐ’ன் காதோர முடிகளில் சிலதில் வெண்ணிறமாகத் தீட்டியதும், ஐ ஃகாகவும், ஃ ஐ யாகவும் மாறியிருந்தனர்.
“பின்பு ஃ ம், ஐ ம் (இதில் யார் முதலில் ஐ யும் ஃ மாக இருந்தனர் என்பது யாருக்கும் தெரியவில்லை)
மேலே கண்ட ஐ X  ஃ என்ற எழுத்து உயிரிகள் நிஜ வடிவமா? அல்லது கதையின் பிராந்தியத்தில் தோன்றி மறையும் மொழி சாத்தியப்பாடுகளா? என்ற புதிர்மையில் கதைப்பிரதி வாசிக்கப்படுகிறது.  இதன் கதை சொல்லியை ஓவியமாக ஐ யோ அல்லது ஃ கா என்ற இருவரில் யார் தீட்டுகிறார்கள் என கதை இறுதியடைகிறது.
                     5   
மொழிவழிக் களவுப் பிரதியாக்கமாக பாலசுப்ரமணியனின் “கனவு மிருகம்தொகுப்பு உருக்கொள்கிறது.  கதை இன்னதொன்று வசப்படாமல் புதிர்மையுள் சுழிக்கும் கதையாடல்களாக வருகின்றன. கதைப்பிரதியில் வாசிப்பின் பிடியிலிருந்து தப்பியோடும் மறைத்தன்மை கொண்ட குறியீடுகள் நிறைந்திருக்கின்றன.  ஒவ்வொரு கதைப்பிரதியை வாசித்து வெளியேறும்போது ஏதோ மற்றொன்றை வாசிக்க மறந்துவிட்டோம் என்பதாகப் படுகிறது.  அப்படி நமது வாசிப்பின் மறதியில் இக்கதைகள் படிந்திருக்கின்றன.



4 comments:

நேசமித்ரன். said...

முதற்கண் ப்ளாக்குலகிற்கு நல்வரவு .

மிக நேர்த்தியான விமர்சனத்திற்கு நன்றி :)

தொடர்ந்து எழுதுக . அதுவே வேண்டுகோள் !

ஜமாலன் said...

வருக வருக ஆழமான பல இலக்கிய விமர்சனங்களைத் தருக...

shanmugam subramaniam (எஸ். சண்முகம்) said...

நன்றி நேசமித்திரன்
நன்றி ஜமாலன்
தொடர்ந்து குறைந்தது வாரம் ஒரு கட்டுரையாவது பதிவேற்றம் செய்ய முயற்ச்சிக்கிறேன்.

Thenammai Lakshmanan said...

அருமை ஷண்முகம்.

காண்டாமிருகமும் யானையும் மயிலும் நனவிலும் கனவிலும் வந்தது போலிருந்தது.

அருமையான திறனாய்வு.

இந்த நம்பர் வெரிஃபிகேஷன் எதுக்கு எடுத்துடலாம் என்பது என் எண்ணம்.